Friday, 27 January 2017

பேசாத பேச்செல்லாம்-.....

பொதுவாகவே தொடர்களை படிக்கும் பழக்கம் எனக்கு இருந்ததேயில்லை... பக்கங்களை புரட்டிவிட்டு சினிமா செய்திகளைத்தான் தேடுவேன்,அறிவை வளர யார் சார் புத்தகம் படிக்கிறா ஆர்வத்தை தீத்துக்கிறதுக்கும் ,பொழுதை  கடத்துவதற்கும் தானே வார இதழ்கள்... அதுவுமில்லாமல் முகநூலும்,வாட்சாப்பும்,ட்விட்டரும் தராத செய்திகளையா வார இதழ்கள் தந்துவிடப்போகிறது என்ற எண்ணமே எனக்கு மேலோங்கி இருக்கிறது.... இந்த எண்ணம் மாறும்போது மாறட்டும்,இப்ப என்ன அவசரம்....

சரி, இது என் வாசிப்பனுபவம்....

அனுபவக்கட்டுரைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் அப்படியாக முதலில் நான் படிக்க ஆரம்பித்தது  எஸ்.இரா வின் " சிறிது வெளிச்சம்" பிறகு ராஜூ முருகனின் " வட்டியும் முதலும்" அதன் பின் சுகாவின் "தாயார் சன்னதி" இப்போது ப்ரியா தம்பியின் "பேசாத பேச்செல்லாம்". விகடனில் தொடராக வந்த காலகட்டத்தில் பக்கத்தை புரட்டிவிட்டு இன்பாக்ஸ், வலைபாயுதேவை மட்டும் தேடித்தேடி படித்துவிட்டு தவறவிட்டிருக்கிறேன். இந்த புக்கம் Subhashree Raghavan தனக்கு யாரோ பரிசளித்திருப்பதாகவும் தன் அறையில் வைப்பதற்கு இடமில்லை என்று என் அறையில் வைத்துவிட்டு சென்றாள், தினமும் கண்ணில் பட்டு உறுத்திக்கொண்டே இருத்ததன் விளைவாக கடந்த குடியரசு தினத்தன்று படித்தே தீரவேண்டும் வெறியேற்றிக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்...

ஒரு பெண்ணாக என்னால் எளிதில் ப்ரியா தம்பியின் கைபிடித்து அவர் அலைத்துச்சென்ற இடங்களுக்கு பயணிக்க முடிந்தது, தன் டீனேஜ் பருவத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தோழியைப்பற்றியும், தன்னோடு ஹாஸ்டலில் தங்கியிருந்த அறைத்தோழிகளைப்பற்றியும், தன்னைச்சுற்றியுள்ள சாதாரண மனிதர்களைப்பற்றியும் அவர் எழுதியதை என்னைச்சுற்றியிருக்கும் மனிதர்களோடு தொடர்பு படுத்த எளிதாக இருந்தது. ஆண்- பெண் நட்பு , காதல் பற்றியும் கணவன் - மனைவி உறவு பற்றியும், மகள் - அம்மா, மகள்- அப்பா, மகன்- அம்மா உறவு, பெண்களின் வைராக்கியம் , பெண்ணியம், ஆண்கள் இவை பற்றி எழுதியிருப்பது என்னுல்  ஒரு புரிதலை ஏற்படுத்தியது. எதையெல்லாம் நாம் இதுவென்று நம்பியிருந்தோமோ, அதையெல்லாம் இது அதுவல்ல இது வேறு  என்று எழுதிய விதம் பிடித்திருக்கிறது. பெண்ணியத்தை இதை விட மென்மையாக யாரும் சொல்லியதாக தெரியவில்லை. " பெண்ணியம்" என்று நீங்கள் எதை நம்பியிருந்தீர்களோ அதைத்தான் பல பெண்கள் இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு நிச்சயம் இந்தப்பகுதியை மட்டுமாவது படிக்கக்குடுக்க வேண்டும். நல்ல புத்தகத்தை படித்து முடித்த திருப்தி இருக்கிறது. படித்து முடித்ததும் இந்த புத்தகத்தை என் அம்மாவிற்கும் என் நெருங்கிய தோழிகள் இருவருக்கும் இந்த புத்தகத்தை பரிசளிக்க வேண்டும் என்று தோன்றியது...

நான் பேசாத பேச்சுகளை இந்த புத்தகம் பேசும் என்ற நம்பிக்கையோடு....

2 comments:

  1. சிறிது வெளிச்சம் நானும் விரும்பி படித்திருக்கிரேன். இப்போலாம் படிக்க எங்கங்க நேரம் இருக்கு.facebook பாக்கவே நேரம் சரியாயிருக்கு.. :P

    ReplyDelete