Thursday, 13 August 2015

ஏணிப்ப(அ)டிகள்...

 

·        முதல் முறையாக வலித்த அடி , அம்மாவிடம் ஏதோ நினைவிலில்லாத சேட்டைக்கு நினைவிலிருக்கிறது அந்த அடியின் வலி

·        பின்பு அப்பாவிடம் ஐவிரல்களும் பத்திரத்தில் வைத்த கைநாட்டாய் கன்னத்தில் பதிந்த அடி, கண்ணாடி கோப்பையை உடைத்ததற்கு....

·        அண்ணனிடம் அடிவாங்கியதில்லை... அவன் சிம்பிளா கையை முறுக்குவான், தன்னை புஜபலபராக்கிரமசாலியைப்போல் பாவித்துக்கொண்டு தம்கட்டி முறுக்குவான் கையை... கண்ணீரில்லாத அழுகையை அவனுக்குத்தந்துவிட்டு,அம்மா அப்பாவிடம் கம்பிளைண்ட் செய்துவிட்டு FIR பதிவிட்டுவிடுவேன், சொல்ல மறந்துட்டேன்... செம்மயா வலிக்கும் அது

·        பின்பு பள்ளிகளில் ஆசிரியர்கள் அடித்துப்பழக ஒத்துழைத்தேன்... பெரும்பாலும் "ஸ்கேல்கள்" தான்... பொம்பளப்புள்ளை என்பதால் இந்த "கண்சஷன்", வலிக்களையே என்றெல்லாம் நடிக்க மாட்டேன்... அழுவனே.... தேம்பித்தேம்பி... மூக்கு ஒழுகும் வரை... துடைத்த கை பிசுபிசுக்கும் வரை அழுவேன்..இவ்வளவு " சென்சிடிவ்வா"இருக்காதே என்று போனாப்போகுதென்று எனக்கே தெரிந்த விசயத்தை அறிவுரையாக சொல்லிப்பீத்துவார்கள்.. "Caring"காமா...

·        அடுத்து... அப்பாவிடம் வாங்கிய அடி தான்... திமிராக பேசினேன், மேக்கப் ஏதும் வார்த்தைகளுக்கு போடாமல், அதாவது மனதில் உள்ள வெறுப்பை கொட்டியதற்கு, அன்னைக்கு வாங்க அடி... மார்கெட்டுனு கூட பார்க்காமல் விட்டேன் பாரு ஓட்டம் என்ற வடிவேலுவைப்போல் வீடு முழுக்க ஓடி, அப்பாவிற்கு சிரமம் வைக்காமல்,சிம்பிளாய் பிடித்துக்கொடுத்தார் அம்மா என்னை.. ஓடிய ஓட்டத்திற்காக , மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி போட்டு கணிசமாக அடி வெளுத்தார் என் அன்பு நைனா

·        பின்பு வாங்கிய அடிகள் அந்தந்த இடத்தில் வலிக்கவில்லை... மாறாக மனம் வலிக்கத்துவங்கியது அவ்வாறாக மனதில் விழுந்த அடிகள் அவமானமாகவும்,நிராகரிப்பாகவும், தாழ்வுமனப்பான்மை இதுபோன்றேயிருந்தது... இதெல்லாம் வலித்த அடிகள்... வலிக்கின்ற அடிகளில்லை... என் வாழ்க்கையை நெறிப்படுத்திய நல்லவர்களுக்கு நன்றி கூறும் விதமாக இந்த பதிவு என்னை ஏற்றிவிட்ட ஏணிகள் அன்னார்ந்து பெருமித்ததோடு பார்க்கிறார்கள் ஏணிகளுக்கு நன்றி சொல்லவாவது ஒருமுறை இறங்கத்தோன்னுகிறது

1 comment:

  1. அடித்ததன் நோக்கம் நிறைவேறிவிட்ட மாதிரி தெரியுது. நடை இலகுவாக சரளமாக இருக்கிறது. FIR அருமையான பிரயோகம்.

    ReplyDelete