Monday, 8 June 2015

வட்டியும் முதலும்!!

ரொம்பவே ரசிச்சுப் படிச்சேன் இந்த புத்தகத்தை!! ராஜு முருகனை வெறும் குக்கூ பட இயக்குனராகமட்டுமே தெரிந்துவைத்திருந்தேன். விகடனில் இந்த தொடர் வந்திருந்த காலகட்டத்தில் இது ஏதோ ஷேர் மார்கெட் பத்தின தொடர் போல என படிக்காமல் கடந்திருக்கிறேன், அது எனக்கு நினைவிருக்கிறது. ஏதேதோ உரையாடிக்கொண்டிருந்த பொழுதில், சட்டென்று இந்த புத்தகம் பற்றி பேச ஆரம்பித்தோம் நானும் என் சித்தப்பாவின் மகனும், இந்த புத்தகத்தை உடனே அவனிடம் வாங்கி வந்தாகியாச்சு... படிக்க ஆரம்பித்ததும் திருவாரூர் , தஞ்சை வட்டார தமிழ் கொஞ்சம் uneasyயாக இருந்தது, மதுரைத்தமிழ் பேசிய தென்தமிழ்நாட்டுத்தமிழச்சிக்கு சோழ நாட்டு தமிழ் ஏதோ போலிருந்தது.. 2,3 எபிசோட்களில் பழகிவிட்டது... மொழி என்பது பழக்கத்தில் வருவது தானே..ரசித்துப் படித்தேன்.. குளத்தில் கால் வைத்ததும் தண்ணிக்குள் இன்னும் மூழ்க ஆசைப்படுவோமே அதுபோல.. நான் வாழ்கையில் சந்தித்த மனிதர்களை ஞாபகத்தில் வைத்திருப்பது ரொம்ப கம்மி!!
மனதை வென்றவரும் கொன்றவரும் தானே அதிகம் நினைவில் நிற்கிறார்கள், கடந்தவர்கள் சுவடின்றி கடந்துவிடுகிறார்கள்....
ராஜு முருகன் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நிகழ்வோடு சம்பந்தப்படுத்தி எழுதிய விதம் பிடித்தது எனக்கு. அநேகமாக ராஜு முருகன் தன் நினைவிலிருக்கும் மனிதர்களை நமக்குக் காட்டிவிட்டார் இந்த புத்தகத்தில்..

இதோ என் நினைவில் நின்ற சில குறிப்புகள் இந்த புத்தகத்தில்

  • பசி தீர்ப்பது ஒரு கனி தான் , ஆனால் அதற்காக நாம் கடப்பது ஒரு வனம்.
  • வனங்களை , மிருகங்களைக் கடந்த பயணம் இருக்கிறது ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்
  • எல்லாவற்றையும் நினைத்துத் தேம்பும் போது காலம் கைகளில் தருவது இன்னொரு தலைமுறையைத்தான், நாம் தொலைத்ததை மகனிடம்/ மகளிடம் தேடுகிறோம்
  • போதையை மாற்றிப்போட்டால் பாதையே மாறிப்போகும், உன் போதையை சாராயத்துல இல்லை நல்ல விஷயத்தில் போடு
  • வாழ்வின் நிலையாமையை மருத்துவமனை இரவுகள் தான் முகத்தில் அறைந்து சொல்கின்றன
  • பிரியத்தின் பெருமழையை அவர்கள் பொழியும் போது எல்லாம், குடைபிடித்துக்கொண்டு போகும் கயவர்கள் நாம்.
  • குழந்தை யார் மாதிரி இருக்கு? என்ற கேள்வியிலேயே தொடங்கிவிடுகிறது ஒவ்வொருவருக்குமான சாயல்களின் உலகம்
  • எல்லாப் பயணங்களிலும் யாரோ ஒருவர் வீட்டைவிட்டு ஓடி வருகிறார், யாரோ ஒருவருக்கு காதல் பூக்கிறது, யாரோ ஒருவருக்கு மரணம் நிகழ்கிறது , யாரோ ஒருவன் கலைஞனாகிறான், யாரோ ஒருவன் குற்றவாளியாகிறான் , யாரோ ஒருவன் தன்னையே கண்டுபிடித்துக் கொள்கிறான் வெகுநாட்களுக்குப் பிறகு.
  • எல்லோருக்குமான பிராத்தனைகளைச்சுமக்கும் கடவுளின் பிராத்தனை என்னவாக இருக்கும்? “ ஆளை விடுங்கடா சாமீ” என்பதா ?
  • வெளிப்படுத்திக்கொள்வது அல்ல, செயல்கள் தான் நல்ல பழக்கம்
  • மாறிக்கொண்டே இருப்பது உனக்கான உலகமும் எனக்கான உலகமும் தான் , உனக்காகவும் , எனக்காகவும் அப்படியே தான் காத்துக் கொண்டு இருக்கிறது நமக்கான உலகம்


“நல்ல புத்தகம் என்பது நாம் புத்தகத்தை புரட்டாமல், நம் வாழ்கையை  புரட்ட வேண்டும்” என்று டுவிட்டரில் ஒரு ட்வீட் படித்திருக்கிறேன்.. இந்த புத்தகம் அப்படியானது. படித்தவை பதிந்திருக்கிறது, பதிந்தவை என்றேனும் செயலில் வெளிப்படும் தானே? படித்தவையும் பார்த்தவையும் தானே செயல்களின் உச்சகட்ட வெளிப்பாடு? ஒரு நல்ல புத்தகத்தை படித்த திருப்தி இருக்கிறது கூடவே “கம்னாட்டி” என்ற வார்த்தையும் ஒட்டிக்கொண்டது அதே போல் ஹாசிப்கான் ஓவியங்கள் .. ப்பாஆ தலைப்புகளுக்கேற்ற ஓவியங்களை ரசித்தேன் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ராஜு முருகன் 

தரவிறக்கம் செய்ய 
http://orathanadukarthik.blogspot.in/2014/08/blog-post_879.html




3 comments:

  1. ராஜு முருகனின் எழுத்துக்கள் விகடம்மூலம் பரிச்சயப் பட்டதால் 'குக்கூ' படம் நமக்கு நெருங்கிய நண்பரின் படைப்பைப் போன்றதொரு அன்னியோன்னியத்தை அளித்தது. அதில் வரும் கதாபாத்திரங்களும் நம் தினசரி வாழ்வில் சந்திக்கும் மனிதர்களை ஒத்திருந்தது கூடுதல் சிறப்பு.

    ReplyDelete
  2. koduthirukkum kurippukal ellame remba azhaku

    ReplyDelete